இந்தியா

வாட்ஸ்ஆப் புதிய விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

9th Jan 2021 12:17 PM

ADVERTISEMENT

 

செல்லிடப்பேசி செயலிகள் வழக்கமாக தங்களது சேவைகளை மேம்படுத்திக் கொண்டே இருப்பது இயல்புதான். ஆனால், தற்போது வாட்ஸ்ஆப் கொண்டு வந்திருக்கும் விதிமுறைகள் அதிகம் பேசுபொருளாக மாறியிருப்பதற்கு காரணங்களும் இருக்கின்றன.

தற்போது புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகளை ஏற்காவிடில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசியிலிருந்து வாட்ஸ்ஆப் செயலி அழிந்துவிடும் என்பதுதான்.

ADVERTISEMENT

இதுவரை இருந்த வாட்ஸ்ஆப் செயலியில் இருந்த விதிமுறைகளில் மிக முக்கியமானது, தனிநபர் சுதந்திரம். பயனாளர்கள் பெறும் அல்லது அனுப்பும் தகவல்கள் ரகசியமாகவே இருக்கும் என்பதுதான்.

ஆனால் புதிய கொள்கையில் அந்த வாக்கியங்கள் இடம்பெற்றிருக்காது. அதாவது, அந்த கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அனுப்புனருக்கும் பெறுநருக்கு மட்டுமே தெரிந்த வாட்ஸ்ஆப் தகவல்கள் இனி சேமிக்கப்பட்டு ஒரு பயனாளர் எந்த விதமான தகவல்களை பெறுகிறார் அல்லது அனுப்புகிறார் என்ற தகவல்களுடன், அவர் எந்தெந்த நேரத்தில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார் உள்ளிட்ட தகவல்களும் ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் பகிரப்படும்.

அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் ஒரு பயனாளர், தனது செல்லிடப்பேசியில் பயன்படுத்தும் மூன்றாம்தர சேவைகளை பயன்படுத்தும் போது, அதனை தங்களது சேவையுடன் ஒருங்கிணைத்து, அந்த மூன்றாம்தர சேவையில் நீங்கள் அல்லது மற்றவர்கள் எதைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் வாட்ஸ்ஆப் கவனிக்கும். 

வாட்ஸ்ஆப் பேமெண்ட் சேவையை பயன்படுத்தும்போது, பரிமாற்ற விவரங்களான பேமெண்ட் அக்கவுண்ட், பெமெண்ட் முறை, பரிமாற்றம் செய்யப்படும் தொகை உள்ளிட்டவற்றை சேமித்து வைத்து, அந்த தகவல்களும் பேஸ்புக்கின் மற்ற சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளப்படவிருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் மேலாக, வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்தும் ஒரு செல்லிடப்பேசியின் பேட்டரியின் அளவு, கிடைக்கும் சிக்னல் அளவு, பயன்படுத்தும் செயலிகளின் வெர்ஷன்கள், பிரவுசர்களின் தகவல்கள், செல்லிலிடப்பேசி நெட்வொர்க், செல்லிடப்பேசி எண், மொழி, நேரம், ஐபி முகவரி ஆகியவற்றையும் வாட்ஸ்ஆப் செயலி சேகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முந்தைய விதிமுறைகளில் இல்லை.

பயன்பாட்டாளர்களுக்கு இதுதொடர்பான புதிய விதிமுறைகள் தெளிவாக அறிவித்து,  அவற்றுக்குப் பயன்பாட்டாளர்கள் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றாலும், பலரும், அதனை முழுவதும் படித்துப் பார்க்காமல் ஒப்புதல் அளித்து வருகிறார்கள். அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் வாட்ஸ்ஆப் செயலி அழிந்துவிடும் என்றும் புதிய எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.

2021, பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் அதற்கு முன்பு எச்சரிக்கைத் தகவல் வெளியாகும் என்றும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு,  அதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டால்தான் வாட்ஸ்ஆப்பைப் பயன்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ் அப்பில் வழக்கமாக வரும் ஏராளமான தகவல்களைப்போல், புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தகவலையும் கருதாமல் வரும் பயன்பாட்டாளர்கள் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT