இந்தியா

உ.பி.: அங்கன்வாடிப் பணியாளர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இருவர் கைது

7th Jan 2021 04:17 AM

ADVERTISEMENT


பதாயுன்: உத்தர பிரதேச மாநிலத்தில் கோயிலுக்குச் சென்ற அங்கன்வாடி உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோயில் பூசாரியின் உதவியாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், பதாயுன் மாவட்டத்தில் 50 வயதான அங்கன்வாடி உதவியாளர் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றார். அவரை கோயில் பூசாரியும், அவரது இரு உதவியாளர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் கூறும்போது, "ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குச் சென்ற எனது தாய் வீடு திரும்பவில்லை. இரவு 11 மணியளவில் கோயில் பூசாரியும், அவரது 2 உதவியாளர்களும் அவரை சடலமாக எங்கள் வீட்டுக்கு கொண்டுவந்தனர். 

எப்படி இறந்தார் எனக் கேட்பதற்கு முன்பே, அவர் அங்குள்ள கிணற்றில் இறந்துகிடந்ததாக அவர்கள் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தோம்' என்றார்.

ADVERTISEMENT

சம்பவம் தொடர்பாக காவல் துறை எஸ்எஸ்பி சங்கல்ப் சர்மா புதன்கிழமை கூறியது: பதாயுன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குச் சென்ற 50 வயதான பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவரது உடலில் காயங்கள் உள்ளன. கால் எலும்பு முறிந்துள்ளது. 

கோயில் பூசாரியும், அவரது இரு உதவியாளர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் 3 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவான பூசாரியைக் கைதுசெய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக உகைதி காவல் நிலைய ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்: இச்சம்பவத்தை 2012-ஆம் ஆண்டின் நிர்பயா சம்பவத்துடன் ஒப்பிட்டு, எதிர்க்கட்சிகள் மாநில அரசைக் குற்றம் சாட்டியுள்ளன.

காங்கிரஸ் கட்சித் தலைவரும், அக்கட்சியின் உத்தர பிரதேச மாநிலப் பொறுப்பாளருமான பிரியங்கா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ஹாத்ரஸ் சம்பவத்தால் பாதிக்கப்பட்டு கெஞ்சியவரின் குரலுக்கு அரசு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. அதிகாரிகளை அரசு காப்பாற்றியது மட்டுமன்றி, பாதிக்கப்பட்டவரின் குரலையும் அடக்கியது.

பதாயுன் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் குரலை காவல் நிலைய அதிகாரிகள் கேட்கவில்லை; சம்பவ இடத்தைக்கூட ஆராயவில்லை. பெண்கள் பாதுகாப்பு குறித்த மாநில அரசின் நோக்கங்களில் தவறு உள்ளது எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பதிவில், "இச்சம்பவம் கொடூரமானது, மனித குலத்துக்கே வெட்கக்கேடானது. இன்னும் எத்தனை நிர்பயாக்கள்? ஆதித்யநாத் அரசு எப்போது விழிக்கும்?' என குறிப்பிட்டுள்ளார்.

சமாஜவாதி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட பதிவில், "ஆட்சியில் இருப்போர் பெண்கள் பாதுகாப்பு குறித்து தவறான கருத்துகளை மட்டுமே கூறிவருகின்றனர். குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவருகிறது.

கடந்த செப். 14ஆம் தேதி ஹாத்ரûஸச் சேர்ந்த தலித் பெண்ணை 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். 

அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செப். 29ஆம் தேதி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT