புது தில்லி: இந்திய பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே கரோனா தொற்று உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொலி வழியாக புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே கரோனா தொற்றை எதிர்கொள்ளுதல், இருநாட்டு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், குறிப்பாக இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமரிடம் விவரித்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "இந்த ஆண்டு இந்தியா-ஜெர்மனி இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 70-ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் ஆக்கபூர்வமான முறையில் ஆலோசனை நடைபெற்றது' என்று தெரிவித்தார்.