திருவனந்தபுரம்: கேரளத்தில் 10,000 மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி முதல் "பசுமை' வளாகங்களாக அறிவிக்கப்படவுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன், வியாழக்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அறிவிப்பு வெளியிடுவார் என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ.சி.மொய்தீன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வரின் அறிவிப்புக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கும் பசுமை நெறிமுறையை பின்பற்றுவதற்கான சான்றிதழ் உள்ளூரில் உள்ள பஞ்சாயத்து, நகராட்சியின் தலைவர்கள் அல்லது வார்டு உறுப்பினர் அல்லது கவுன்சிலரால் சமர்ப்பிக்கப்படும். இந்த பசுமை நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக ஹரிதா கேரளம் இயக்கம் என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களின் அன்றாட நடவடிக்கைகளில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாத பொருள்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே பசுமை அலுவலகங்களை ஏற்படுத்துவதன் நோக்கம் ஆகும்.
ஹரிதா கேரளம் இயக்கத்தின் மூலம் மாநிலத்தை தூய்மையாக்கவும், நீர் ஆதாரங்களையும், மண் வளத்தையும் பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மூலம், அந்தந்த அலுவலகங்கள் பசுமை நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்தத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளும்.
அதன்படி மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, பசுமைமயமாக்கலை கடைபிடிக்கிறதா என்பதை இந்த இயக்கம் ஆய்வு மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.