கரோனா வைரஸுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் தொடங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியையும், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலை. துணையுடன் சீரம் நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியையும், பொதுமக்களுக்கு செலுத்த மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பரிசோதனையில் உள்ள தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 'மேட் இன் இந்தியா' கரோனா தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, அதன் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது என்றார்.
மேலும், 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளுக்கு உலகளாவிய தேவை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அளவை விட தரம் முக்கியமானது. ஆத்மநிர்பர் பாரத்திற்கான தேடலில் நமது தரத்துடன் நமது தரமும் உயர வேண்டும்' என்று கூறியுள்ளார்.