மேற்குவங்க பாஜக தலைவர் கிருஷ்ணெந்து முகர்ஜியின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் பாசிம் பர்தாமன் மாவட்டத்தின் அசன்சோலில் உள்ள தன் வீட்டிற்கு பாஜக மேற்கு வங்காள மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணெந்து முகர்ஜி சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் நிறுத்திய அவரின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள்தான் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, முகர்ஜியின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்த சம்பவர் குறித்து முகர்ஜி, 'நான் ஞாயிற்றுக்கிழமை இரவு கொல்கத்தாவிலிருந்து அசன்சோலின் ஹிராபூரில் உள்ள வீட்டிற்குத் திரும்பிய நிலையில், எனது காரை என் வீட்டின் அருகே நிறுத்தி கதவுகளைத் திறக்க முயன்றேன். அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வாகனத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர்களின் முயற்சி தோல்வியுற்றது. அவர்கள் மூவரும் திரிணமூல் கட்சிக்காரர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதுகுறித்து காவல்த்துறையிடம் புகார் தெரிவித்துள்ளேன்' என்றார்.