இந்தியா

டிஎஸ்பியாக இருக்கும் மகளுக்கு பெருமிதம் பொங்க சல்யூட் வைத்த காவல் ஆய்வாளர்

4th Jan 2021 06:04 PM

ADVERTISEMENT


திருப்பதி: ஆந்திர மாநில காவல் ஆய்வாளர் ஒருவருக்கு, காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் தனது மகளுக்கு பெருமிதம் பொங்க சல்யூட் வைக்கும் தருணம் வாய்க்கப்பெற்றது.

திருப்பதியில், காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருப்பதி கல்யாணி அணை பகுதி காவல்துறை பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் ஷியாம் சுந்தர், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் தனது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தியை சந்தித்த போது, பெருமிதம் பொங்க சல்யூட் வைத்தார்.

தனது மகளை டிஎஸ்பியாக பார்த்ததும், கடமையை சிறிதும் மறக்காத ஷியாம் சுந்தர், உடனடியாக தனது கையை உயர்த்தி, உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் வைத்தார். இதனைப் பார்த்த பலரும், மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் உணர்ந்தனர்.

காவல் ஆய்வாளராக இருக்கும் தந்தையை விட பதவியில் உயர்ந்த காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் மகளை, காவல்துறை கூட்டத்தில் பார்த்த தந்தை, தேடிச் சென்று அவருக்கு மரியாதை செய்ததோடு, மேடம் என்று மரியாதையோடு அழைத்து உச்சி குளிர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்தி ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறையில் இணைந்துள்ளார்.

ADVERTISEMENT

தந்தையின் சல்யூட்டை ஏற்றுக் கொண்டு பதில் சல்யூட் வைத்த பிரசாந்தி, 'என்ன அப்பா' என்று தெலுங்கில் கேட்டு சிரித்தார். இதனைப் பார்த்து கூட்டத்தில் பங்கேற்க வந்த காவலர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வழக்கமாக இதுபோன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்து ரசித்திருப்போம். ஆனால் உண்மையில் இந்தக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
 

புகைப்படம்: ஆந்திர காவல்துறை டிவிட்டர் பக்கம்

Tags : andhra police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT