இந்தியா

இமாசலில் சாலை விபத்தில் பலியான இளைஞரால் மூன்று பேருக்கு மறுவாழ்வு

4th Jan 2021 05:05 PM

ADVERTISEMENT


சண்டிகர்: இமாசலப் பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய 26 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர்.

விபத்தில் சிக்கி மாரடைப்பால் மரணமடைந்த இளைஞரின் சிறுநீரகம் தானம் அளிக்கப்பட்டதால், மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த ஒரு நோயாளி, தற்போது மறுவாழ்வு பெற்றுள்ளார்.

காங்ரா மாவட்டம் ஜோகிபூர் கிராமத்தைச் சேர்ந்த பங்கஜ் என்ற இளைஞரின் பெற்றோர், தங்களது பிள்ளை இறந்தபோதும், பலர் மறுவாழ்வு பெறுவார்களே என்ற எண்ணத்தோடு உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர்.

இது குறித்து பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை இயக்குநர் ஜகத்ராம் கூறுகையில், இவர்கள் வெறும் மூன்று பேருக்கு மட்டும் மறுவாழ்வு அளிக்கவில்லை. ஏராளமானோருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளனர் என்று பங்கஜின் குடும்பத்தினருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். மேலும், பங்கஜ் உயிரிழக்கவில்லை, அவர் தற்போது மூன்று பேரின் உருவில் உயிர் வாழ்கிறார் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பங்கஜ் கடந்த டிசம்பர் 28-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். தலையில் படுகாயமடைந்த பங்கஜ் கோமா நிலைக்குச் சென்றார். தொடர் சிகிச்சை அளித்தும் டிசம்பர் 30-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். பொதுவாக மாரடைப்பால் மரணமடைபவர்களின் ஒரு சில உடலுறுப்புகளை மட்டுமே தானமாகப் பெற முடியும். அதுவும் சிக்கலான காரியமாகவே இருக்கும். அதனை பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை மருத்துவர்கள் சவாலாக எடுத்துச் செய்து வருகிறார்கள்.

உடனடியாக அவரது பெற்றோரிடம் பேசி, சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் பெற மருத்துவர்கள் முடிவு செய்தனர். பெற்ற மகனை இழந்த சோகத்திலும் உடல் உறுப்புகளை தானமளிக்க பெற்றோர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அந்த மருத்துவமனையில் உடல் உறுப்பு செயலிழந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு உடனடியாக உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

ஒரு சிறுநீரகமும், இரண்டு கண்விழிகளும் தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட்டது.

இரண்டு மாதத்தில் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். இன்று அவனே இல்லை என்று கண்ணீருடன் கூறினார் பங்கஜின் தந்தை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT