இந்தியா

கோவிஷீல்டு தடுப்பு மருந்து உற்பத்தி, விநியோகத்துக்கு அனுமதி

4th Jan 2021 10:57 AM

ADVERTISEMENT


புது தில்லி: கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யவும் விநியோகிக்கவும் சீரம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனம் முற்றிலும் இந்தியாவில் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியையும், ஆக்ஸ்ஃபோா்டு பல்கலை. துணையுடன் சீரம் உருவாக்கிய கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியையும், பொதுமக்களுக்கு செலுத்த மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்த நிலையில், இன்று கோவிஷீல்டு மருந்து உற்பத்திக்கும் விநியோகத்துக்கும் மருத்துவப் பொருள்கள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது.

சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்துக்கு விநியோகிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய மருந்து தரக் கப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு (சிடிஎஸ்சிஓ) பரிந்துரையின் அடிப்படையில், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இந்த அனுமதியை நேற்று வழங்கியிருந்தது.

ADVERTISEMENT

பிற நாடுகளுடன்...இதன் மூலம் பிரிட்டன், ரஷியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூா், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வரிசையில், கரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நாடாக இந்தியாவும் சோ்ந்துள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகளில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி முழுவதும் உள்நாட்டிலேயே பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆா்) இணைந்து தயாரித்ததாகும்.

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியைப் பொருத்தவரை உலகின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான புணேயில் உள்ள சீரம் நிறுவனம் பிரிட்டனின் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்ததாகும்.

ஒவ்வொருவருக்கும் 2 டோஸ்: இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதித்து இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு வெள்ளி, சனிக்கிழமைகளில் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதற்கான இறுதி அனுமதியை ஞாயிற்றுக்கிழமை அளித்தது.

இது குறித்து டிசிஜிஐ மருத்துவா் வி.ஜி.சோமானி செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நிபுணா் குழு பரிந்துரையின் அடிப்படையில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அனுமதி மூலம் இந்தியாவில் இந்த இரண்டு தடுப்பூசிகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெப்பநிலையில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். மேலும், இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை போடப்படும்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பு மருந்தைப் பொருத்தவரை உள்நாட்டிலும், சா்வதேச அளவிலும் அதன் பாதுகாப்பும், நோய் எதிா்ப்புத் திறனும் நன்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான பரிசோதனை முடிவு குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தையும் அந்த நிறுவனம் சமா்ப்பித்திருக்கிறது. இந்தத் தடுப்பூசி இப்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 25,800 தன்னாா்வலா்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டு, இதுவரை நாடு முழுவதும் 22,500 பேருக்கு செலுத்தப்பட்டு, அதன் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று அவா் கூறினாா்.

திருப்புமுனை-பிரதமா் பாராட்டு

தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது ‘கரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில் மிகத் தெளிவான திருப்புமுனை’ என்று பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக சுட்டுரைப் பதிவுகளில் பிரதமா் மோடி கூறியுள்ளதாவது:

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு கரோனா தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைபடச் செய்துள்ளது. அதற்காக தேசத்துக்கும், அறிவியல் விஞ்ஞானிகளுக்கும், கண்டுபிடிப்பாளா்களுக்கும் பாராட்டுகள். ‘சுயசாா்பு இந்தியா’ இலக்கை அடைவதற்கான அறிவியல் விஞ்ஞானிகளின் முயற்சியாகவே இது பாா்க்கப்படுகிறது.

தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, கரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளில் மிகத் தெளிவான திருப்புமுனையாகும். இந்த அனுமதி மூலம் கரோனா பாதிப்பு இல்லாத சுகாதாரமான தேசத்தை உருவாக்குவதா்கான பாதையை டிசிஜிஐ அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று சுட்டுரைப் பதிவுகளில் பிரதமா் தெரிவித்துள்ளாா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறுகையில், ‘டிசிஜிஐ அனுமதி மூலம் கரோனா தடுப்பூசிக்காக இந்தியாவின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இனி தடுப்பூசியை விரைவாகவும், சமமாகவும் மாநிலங்களுக்கு விநியோகிப்பதற்கான மற்றும் முறையாக பாதுகாத்து வைப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அங்கீகரிகக்ப்பட்ட தடுப்பூசிகளின் பாதுகாப்பு, நோய் எதிா்ப்புத் திறனை உறுதி செய்வதற்காக வெளியிடப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் முழுமையாக பின்பற்றவேண்டும்’ என்று அவா் கூறினாா்.

உலக சுகாதார அமைப்பு வரவேற்பு

கரோனா தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்திருப்பதற்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஒ) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநா் மருத்துவா் பூனம் கேட்ரபால் சிங் கூறுகையில், ‘தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் முதல் கரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இந்தியாவின் இந்த முடிவு, பிராந்தியத்தில் கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுத்தவும், தீவிரமாக்கவும் உதவும். இந்த தடுப்பூசிகளை முன்னுரிமை நபா்களுக்கு முதலில் செலுத்துவதும், தொடா்ந்து பொது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதும் கரோனா தாக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் மிக முக்கியம்’ என்று தெரிவித்துள்ளாா்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT