நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை குணமடைந்தோர் விகிதம் 96.16 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 20, 923 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 99,27,310 -ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 96.16 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் புதிதாக 18,178 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,03,23,965-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 217 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,49,435-ஆக அதிகரித்துள்ளது. அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் தற்போது இரண்டு லட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 13-ஆவது நாளாக, 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 65 ஆயிரத்து 374 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்ட்ராவில் 53 ஆயிரத்து 137 பேரும், தற்போது சிகிச்சையில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி ஜனவரி 2-ஆம் தேதி வரை 17.48 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 9 லட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.