உத்தரப் பிரதேசம் காசியாபாத் நகரில் மயானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழ வியாபாரி ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சுமார் 50 பேர் முராத் நகர் பகுதியிலுள்ள மயானத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது மழை பெய்ததால், நிழல் தேடி புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் கீழ் அவர்கள் நின்றுள்ளனர். இந்த நிலையில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் 19 பேர் பலியாகியுள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 3 உடல்களை மீட்ட நிலையில், மற்ற உடல்களை காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியரே அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.