லக்னௌ: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வந்த காஷ்மீர் சிங் (75) என்ற விவசாயி, உத்தரப்பிரதேச நுழைவாயில் காஸியாபாத் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
காஸியாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏராளமான விவசாயிகளில் ஒருவரான காஷ்மீர் சிங், விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த நகரும் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த விவசாயி, மேற்கு உத்தரப்பிரதேச நகரான ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது தற்கொலைக் கடிதத்தில், தனது இறுதிச் சடங்குகளை தனது பேரன், போராட்டம் நடந்து வரும் இடத்திலேயே நடத்த வேண்டும் என்பதே தனது இறுதி ஆசை என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் நவம்பர் 28-ம் தேதி முதல் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதேப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேச மாநிலம் பக்பட் மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது விவசாயி கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்த நிலையில், இன்று ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.