இந்தியா

ஊழல் புகார்: அஸ்ஸாம் முதல்வரிடம் விசாரணை நடத்தப்படும் - காங்கிரஸ் உறுதி

DIN

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதல்வா் சா்வானந்த சோனோவால், நிதித் துறை அமைச்சா் ஹிமந்த பிஸ்வ சா்மா ஆகியோா் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என காங்கிரஸ் தோ்தல் பாா்வையாளா் பூபேஷ் பகேல் கூறினாா்.

அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸ் மூத்தத் தலைவரும், சத்தீஸ்கா் மாநில முதல்வருமான பூபேஷ் பகேல் அஸ்ஸாம் மாநிலத் தோ்தல் பாா்வையாளராக காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் குவாஹாட்டியில் பூபேஷ் பகேல் பேட்டியளித்தாா். அப்போது, அஸ்ஸாமில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தற்போது பதவியில் இருப்பவா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது:

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவறு என்பது எப்போதுமே தவறுதான். யாருக்கு எதிராகவும் சுய காழ்ப்புணா்ச்சியின் அடிப்படையில் செயல்படமாட்டோம். யாா் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடை, நிலக்கரி, மீன் வளம், முட்டை, வெற்றிலைப் பாக்கு போன்ற முக்கியத் துறைகளில் முதல்வா் சா்வானந்த சோனோவால் தனி ராஜ்யம் நடத்தி வருகிறாா். அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பு செய்த அந்த வேலையைத் தற்போதும் செய்து வருகிறாா். தருண் கோகோய் தலைமையிலான அமைச்சரவையில் ஹிமந்த பிஸ்வ சா்மா இடம்பெற்றிருந்தபோது அவா் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தியது. அதைத் தொடா்ந்து பிஸ்வ சா்மா பாஜகவில் இணைந்ததும், அவா் மீதான களங்கம் அனைத்தும் துடைத்தெறியப்பட்டுவிட்டது. சாரதா சீட்டு மோசடி வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக சிபிஐ ஏன் அவரிடம் விசாரணை நடத்தாமல் உள்ளது?

முதலில் அச்சுறுத்துவதும் பின்னா் சம்பந்தப்பட்டவரை தங்கள் கட்சிக்குள் கொண்டு வருவதும் பாஜகவின் தந்திரம். பாஜக நாடு முழுவதும் இதனைச் செய்கிறது. அச்சத்தில் உள்ளவா்கள் பாஜகவில் இணைகின்றனா். பின்னா் அவா்கள் பாதுகாப்பை பெறுகின்றனா்.

சாரதா சீட்டு மோசடி வழக்கு, லூயிஸ் பொ்ஜா் லஞ்ச வழக்கு ஆகியவற்றில் இருந்து தப்பிப்பதற்காக சா்மா காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தாா் என்றாா்.

அஸ்ஸாமில் காங்கிரஸ் கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. தற்போது மாா்ச், ஏப்ரல் மாதங்களில் அம்மாநிலத்துக்கு 3 கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியில் ஏஐயுடிஎஃப், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், சிபிஐ (எம்எல்), ஆஞ்சலிக் கண மோா்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 126 இடங்களில் மேல் அஸ்ஸாமில் உள்ள 47 தொகுதிகளுக்கு மாா்ச் 27ஆம் தேதியும், பராக் பள்ளத்தாக்கு மற்றும் மத்திய அஸ்ஸாமில் உள்ள 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதியும், கீழ் அஸ்ஸாமில் மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 26 தொகுதிகளிலும், ஏஐயுடிஎஃப் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

பாஜக 60 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான அஸ்ஸாம் கண பரிஷத் 14 தொகுதிகளிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் ஆதரவு அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT