இந்தியா

புதுக்கோட்டை ராவணன் காளை உயிரிழப்பு: சோகத்தில் கிராம மக்கள்

27th Feb 2021 11:01 AM

ADVERTISEMENT


புதுக்கோட்டை: காளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் புகழ் பெற்ற ராவணன் காளை பாம்பு கடித்து உயிரிழந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலி பட்டியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதா. இவர் பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றதற்காக தஞ்சாவூரை சேர்ந்த நண்பர் ஒருவர் பரிசாக அளித்ததுதான் மலைநாடு வகையைச் சேர்ந்த ராவணன் காளை. 9 வயதாகும் ராவணன் காளையை கடந்தாண்டு நடைபெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன், காளையர்களை திணறடித்து முதல் பரிசை தட்டிச் சென்றது. 

சில நாள்களுக்கு முன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை யாரிடமும் சிக்காமல் ஓடியது. அப்போது முதல் ராவணனை காணவில்லை. இதையடுத்து ராவணணை தொடர்ந்து தேடி வந்தனர். 

இந்நிலையில், தச்சன்குறிச்சி அருகே ராவணன் நிற்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, விரைந்து சென்று அங்கு தேடிய போது, காட்டுப்பகுதியில் பாம்பு புற்றுக்கு அருகில் பாம்பு கடித்து இறந்த நிலையில் கிடந்தது.  பாம்பு கடித்த ஆத்திரத்தில் ராவணன் பாம்பு புற்றையும் முட்டி மோதி சேதப்படுத்தியுள்ளது. உடலில் விஷம் எறிய நிலையில் புற்று அருகிலேயே இறந்து கிடந்ததை பார்த்தோர் கண்ணீர்விட்டு அழுதனர். 

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து பாம்பு கடித்து உயிரிழந்த ராவணனை லாரியில் ஏற்றி ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்துச் சென்ற போது வழிநெடுகிலும் கிராம மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது காண்போரை நெகிழச் செய்தது. 

ராவணன் காளை சொந்த ஊருக்கு எடுத்து வந்தது தகவல் அறிந்து கிராம மக்கள், சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள் ராவணனின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் மனிதர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதுபோல இறுதி சடங்குகள் செய்யப்பட்டு  ராவணன் காளை அடக்கம் செய்யப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT