இந்தியா

எதிா்காலத்தில் இந்தியாவின் வழிகாட்டி தமிழகம்: ராகுல் காந்தி

27th Feb 2021 11:04 PM

ADVERTISEMENT

எதிா்காலத்தில் தமிழகம் இந்தியாவின் வழிகாட்டியாக திகழும் என்றாா் ராகுல்காந்தி.

மூன்றுநாள் பிரசார பயணமாக தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி சனிக்கிழமை தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலையில் நான்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியது:

தமிழகத்தில் உள்ள குழந்தைகள், சகோதர, சகோதரிகள், பெண்கள் ஆகியோரின் சிரிப்பு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. எனது பாட்டி, அப்பா ஆகியோருக்கு அளித்த மதிப்பையும், மரியாதையையும் தமிழக மக்கள் எனக்கு அளித்துள்ளனர். தமிழர்கள் ஏழையாக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும் எப்போதும் சுயமரியாதையுடன் வாழ்பவர்கள். இது எனக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. 

ADVERTISEMENT

எதிர்காலத்தில் தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழும். ஏனென்றால், இங்கு சிறுதொழில்கள் அதிகம் உள்ளன. சீனா வணிகத்தை வீழ்த்த வேண்டுமானால், தமிழர்களின் சிறு தொழில்கள் பெருக வேண்டும். இங்குள்ள இளைஞர்கள் அதிக கனவோடும், பலத்தோடும் உள்ளனர். ஆனால், அவர்களின் திறமைக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. தமிழகத்தில்,சிறுதொழில்கள் பெருகும்போது,  செல்லிடபேசி, காலணி, ஆயத்த ஆடை உள்ளிட்ட அனைத்து பொருள்களும் தயாரிக்கும் இடமாக விளங்கும். தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு "மேட் இன் இந்தியா' என வெளிவரும் என நான் நம்புகிறேன்.

ஆனால், மத்திய அரசு சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்காமல், ஒருசில பெரிய நிறுவனங்களை மட்டுமே ஊக்குவிக்கிறது. 

கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் போடும் வரிகள்தான் காரணம். 

பிரதமர் மோடி, தமிழகத்தை தொலைக்காட்சி பெட்டி போன்று கையாளுகிறார். ரிமோட் மூலம் தமிழக முதல்வரை இயக்குகிறார். 

நான் தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டு செல்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளத் தொழிலாளர்களை சந்தித்தேன். அவர்களுக்கு உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காததால், அவர்கள் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியவில்லை. அவர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். நான் உணவில் உப்பு போட்டுக்கொள்ளும்போதெல்லாம். உப்பளத்தொழிலாளர்களின் உழைப்பு நினைவுக்கு வரும் என்றார். ராகுல்காந்தியின் பேச்சை முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் தமிழில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து, ராகுல்காந்திக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன் வெள்ளிச்செங்கோல் வழங்கினார். 

இக்கூட்டத்தில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகப் பொறுப்பாளர் சஞ்சய் தத்,  பிரசாரக் குழு தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., செய்தி தொடர்பாளர் கோப்பண்ணா, மாநில பொதுச்செயலர் வானமாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : rahul gandhi TN Election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT