இந்தியா

இந்தியாவைச் சேர்ந்தவருக்கு கம்போடிய நாட்டின் உயரிய விருது

DIN


குவாஹாட்டி: இந்தியாவைச் சேர்ந்த கெளசிக் பரூவா, கம்போடியா அரசின் உயர்ந்த விருதைப் பெற்றுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் (ஐ.எஃப்.ஏ.டி.) இயக்குநராக பதவி வகிக்கும் அவருக்கு, வேளாண் துறை சார்ந்த சேவைகளுக்காக இந்த விருதை வழங்கி அந்நாட்டு அரசு கெளரவித்துள்ளது.
இதுதொடர்பாக, கம்போடியாவிலுள்ள ஐ.நா. வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ராயல் ஆர்டர் ஆஃப் சாஹமித்ரை என்ற அமைப்பின் கீழ் கெளசிக் பரூவாவுக்கு கம்போடிய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மன்னருக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றிய வெளிநாட்டினருக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
மேலும், பரூவாவுடன் பணியாற்றும் ஐ.எஃப்.ஏ.டி. திட்ட அதிகாரியான கம்போடியா நாட்டின் சக்பூசெத் மெங்கி என்பவருக்கும் ராயல் ஆர்டர் ஆஃப் சோவத்தராவின் கீழ் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐ.எஃப்.ஏ.டி. என்பது ஐ.நா.வின் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இது வளரும் நாடுகளின் கிராமப்புறங்களில் வறுமை மற்றும் பசிக்கு தீர்வு காணும் அமைப்பாகும்.
கம்போடியாவில் வறுமைக் குறைப்பு, கிராமப்புற மேம்பாடு, சிறுதொழில் விவசாய அபிவிருத்தி ஆகியவற்றில் இருவரும் செலுத்திய பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாக விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரான பரூவாவும், மெங்கும் ஐ.எஃப்.ஏ.டி. ஆதரவு திட்டங்களால் மேம்பட்ட உணவுப் பாதுகாப்பு, வீட்டு வருமானம் மற்றும் சொத்துகளை அதிகரித்தல், விவசாய உற்பத்தித்திறன், பன்முகத்தன்மை, சாலைகள் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை மேம்பாடு அடையச்செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பரூவா, ஐ.எஃப்.ஏ.டி. திட்டத்தின் மூலம் பிராந்தியத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் பெரும் பங்காற்றியுள்ளார். இதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் சூரியசக்தி பம்புகள், சூரியசக்தி குஞ்சுபொரிப்பகம் போன்ற நிலையான மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பரூவா கூறியதாவது: மெய்நிகர் சந்தை தளம் சிறுதொழில் விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், வாங்குபவர்களுடனான ஒப்பந்தங்களை முறைப்படுத்தவும், உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை அணுகவும் உதவுகிறது. கம்போடிய அரசின் விருதை பெற்றது பெருமையாக உள்ளது. அந்த அரசுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். கம்போடியாவில் விவசாயத் துறையை மேம்படுத்தவும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் அயராது உழைத்த அனைத்து சகாக்களுக்கும் இந்த விருதில் பங்குண்டு. நட்பு நாடுகள் தனது அர்ப்பணிப்பு, நிபுணத்துவத்தை நம்புவதால், 2030 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 40 மில்லியன் சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் லட்சிய திட்டத்தை ஐஎஃப்ஏடி உருவாக்கி வருகிறது என்றார் அவர்.
சோமாலியாவின் ஐ.எஃப்.ஏ.டி. மேலாளராக இருந்த பரூவா, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா உள்ளிட்ட பிராந்தியங்களில் கிராம அபிவிருத்தி திட்டங்களில் பணியாற்றியுள்ளார். "வின்ட் ஹார்ஸ்' என்ற தனது முதல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருதை பரூவா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT