இந்தியா

கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 6 பேர் பலி: சிஐடி விசாரணைக்கு உத்தரவு

24th Feb 2021 03:32 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 6 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என உள் துறை பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
 கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாபூர் மாவட்டம், குடிபன்டே வட்டம், பேரேசந்திரா அருகேயுள்ள ஹிரேநாகாவல்லி கிராமத்தில் ஒரு கல்குவாரிக்கு மினி சரக்கு வேனில் ஜெலட்டின் குச்சிகளை செவ்வாய்க்கிழமை ஏற்றி வந்துள்ளனர்.
 மினி வேனில் 5 பேரும், வேனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெலட்டின் குச்சிகள் வெடித்தன. இதில், மினி வேனில் அமர்ந்திருந்த 4 பேரும், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் பலத்த தீக்காயங்கள் அடைந்து, உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் பொறியாளர் உமாகாந்த், காவலாளி மகேஷ், முரளி, ராமு, அபி, கங்காதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வேனின் ஓட்டுநர் சிராஜ் கீழே குதித்து தப்பியோடியுள்ளார்.
 தகவலறிந்த குடிபன்டே போலீஸார், வெடிவிபத்து குறித்து வேனின் ஓட்டுநர் ரியாஜ் உள்ளிட்ட 2 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 விசாரணை நடத்தப்படும்} முதல்வர் எடியூரப்பா: வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். சம்பவ இடத்தை அமைச்சர் கே.சுதாகருடன் நேரில் சென்று பார்வையிட்ட மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "வெடிவிபத்து குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக கல்குவாரியின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்' என்றார்.
 "வெடிவிபத்து நடைபெற்றதையடுத்து சட்டவிரோத சுரங்க நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜெலட்டின் உள்ளிட்ட வெடிக்கக் கூடிய பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள், வெடிபொருள்களை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சுரங்கத் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
 சம்பவ இடத்தை ஏடிஜிபி பிரதாப் ரெட்டி, மத்திய மண்டல ஐஜிபி சந்திரசேகர், எஸ்.பி.மிதுன்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
 சிவமொக்கா மாவட்டம், ஹுனசோடு கிராமத்தில் கடந்த ஜன. 22}இல் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 6 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 பிரதமர் மோடி இரங்கல்:வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT