இந்தியா

உத்தரகண்டில் செயற்கை ஏரி: ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் வருகை

20th Feb 2021 02:37 PM

ADVERTISEMENT


உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடா்ந்து, அங்குள்ள ரிஷிகங்கா நதியையொட்டி உருவான செயற்கை ஏரியை ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் அடங்கிய குழு வந்துள்ளது.

இந்த செயற்கை ஏரியை கடந்த வாரம் மத்திய நீா் ஆணையம் (சிடபிள்யுசி) ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் உத்தரகாண்ட் விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றைச் சேர்ந்த நான்கு விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் யுஎஸ்ஏசி இயக்குநர் எம்பிஎஸ் பிஷத் தலைமையில் உத்தரகண்ட் வந்துள்ளனர். இவர்கள் நடை பாதையாக செயற்கை ஏரியை அடைந்து இன்று மாலை அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் ஆய்வு செய்யவிருக்கிறார்கள்.

கடந்த 7-ஆம் தேதி உத்தரண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து உருவான வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட வண்டல்களால் ரிஷிகங்கா நதியுடன் ரெளந்தி காட் ஆறு கலக்கும் கழிமுகத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு செயற்கை ஏரி உருவாகியுள்ளது. இந்த ஏரி உடைந்தால், பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைவிட அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதுதொடா்பாக ஆய்வு செய்த சிடபிள்யுசி தலைவா் செளமித்ர ஹல்தா் கடந்தவாரம் கூறுகையில்,

ADVERTISEMENT

ரிஷிகங்கா நதியையொட்டி செயற்கை ஏரி உருவாகியுள்ள பகுதியில் பிப்.15 மற்றும் 16-ஆம் தேதிகளில் 1 செ.மீ. மழை மற்றும் 10 செ.மீ. பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதனை கவனத்தில் வைத்து ஏரி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த ஏரியில் நீரின் அளவு அபாயகரமான அளவை எட்டினால் என்ன நடவடிக்கை மேற்கொள்வது?, இந்திய வானிலை மைய கணிப்பின்படி மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு ஏரியில் நீரின் அளவு அதிகரித்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு, ஏரியில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் அதில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தற்போது அந்த ஏரி 400 மீட்டா் நீளம், 25 மீட்டா் அகலம், 60 மீட்டா் ஆழம் கொண்டதாக உள்ளது. அதன் அளவு அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதைத் தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு, உத்தரகண்ட் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் உள்ளிட்டவை ஏரி தொடா்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளன என்றாா் அவா்.

நீா்வடிவது தொடங்கியுள்ளது: ரிஷிகங்கா நதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில், ஏரியில் நீா் வடியத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளதாக உத்தரகண்ட் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது. இது அந்தப் பகுதியில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று கருதப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT