இந்தியா

மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வெங்கைய நாயுடு வலியுறுத்தல்

DIN

புது தில்லி: தொற்று அல்லாத நோய்கள் நாட்டில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அமர்ந்தபடியே பணிகள் மேற்கொள்வதையும், முறையற்ற உணவுப் பழக்கங்களையும் கைவிட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் எம். வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள மரபணு விரல்ரேகைகள் மற்றும் பரிசோதனை மையத்தை பார்வையிட்ட பின் விஞ்ஞானிகளிடையே பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவுகளில், இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகளில் 61% இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற தொற்று அல்லாத நோய்களால் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.

இந்தப் போக்கைத் தடுப்பதற்காக, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து மிகப்பெரிய தேசிய அளவிலான பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாயுடு வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு விஞ்ஞானிகளை அவர் கேட்டுக் கொண்டார். மரபியல் நோய்கள் பற்றி பேசிய குடியரசு துணைத் தலைவர், பல்வேறு மரபியல் நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த செலவில், எளிமையான பரிசோதனை முறைகளை விஞ்ஞானிகள் கண்டறியுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளிடையே காணப்படும் அரிய மரபியல் நோய்களுக்கான ஆய்வகத்தையும் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் சுமார் 350 மில்லியன் மக்களும், இந்தியாவில் சுமார் 70 மில்லியன் பேரும் அரிய நோய்களால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றில் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை இல்லாததால் இது போன்ற அரிய நோய்களால் பொருளாதாரத்திலும், சமூக கட்டமைப்பிலும் பெரும் தாக்கம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றின் பரிசோதனையில் துல்லியமான முடிவுகளை வழங்கிய மரபணு விரல் ரேகைகள் மற்றும் பரிசோதனை மையத்தின் போராளிகளை வெங்கையா நாயுடு வெகுவாகப் பாராட்டினார். இந்திய மக்கள்தொகையில் பரவும் கரோனா  தொற்றின் தன்மையை அறிந்து இந்த மையம் செயல்பட்டதையும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT