சீனாவுடனான எல்லையில் எந்தப் பிரச்னையும் நடக்கவில்லையெனில் எதற்காக அந்நாட்டுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு லடாக் தொடர்பான நிலைப்பாடு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களைவில் சமர்பித்த அறிக்கையில் சீனாவுடனான எல்லையில் உள்ள இந்தியப் படைகள் ஃபிங்கர் 4 பகுதியில் இருந்து ஃபிங்கர் 3 பகுதிக்கு பின்வாங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி ஏன் நமது நிலப்பரப்பை பிரதமர் நரேந்திர மோடி சீனத்துக்கு விட்டுக் கொடுத்தார்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித், “இந்தியா-சீனா எல்லையில் ராகுல் காந்தி தேசத்திற்காக குரல் கொடுத்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் “நமது நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை எனில் எதற்காக சீன அரசுடன் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்” என கேள்வி எழுப்பியுள்ளார்.