இந்தியா

முழு அளவில் ரயில் சேவை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை: ரயில்வே

13th Feb 2021 04:25 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டில் கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு இருந்தது போன்று முழு அளவில் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவது குறித்து இதுவரை எந்த தேதியும் முடிவு செய்யப்படவில்லை என்று இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

நாட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதுபோன்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இன்று இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் ஒரு தேதியைக் குறிப்பிட்டு நாடு முழுவதும் முழு அளவில் பயணிகள் ரயில் போக்குவரத்துத் தொடங்கும் என்று தொடர்ச்சியாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

ஆனால், நாட்டில் முழு அளவில் பயணிகள் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கரோனா தொற்றுப் பரவல் மெல்ல குறைந்து வரும் நிலையில், ரயில் சேவை படிப்படியாகவே உயர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது நாட்டில் 65 சதவீத  ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட ரயில்கள் புதிதாக இயக்கப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கப்படும்.

பயணிகள் ரயில் போக்குவரத்தை முழு அளவில் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து விஷயங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

தயவு கூர்ந்து, ரயில் போக்குவரத்துத் தொடர்பான ஊகங்களை தவிருங்கள். அது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதும் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT