இந்தியா

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது துறைமுகங்கள் அதிகார மசோதா

11th Feb 2021 04:59 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட 12 முக்கிய துறைமுகங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

காண்ட்லா, மும்பை, மர்மகோவா, மங்களூரு, கொச்சி, சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பாராதீப், கொல்கத்தா உள்ளிட்ட நாட்டிலுள்ள 12 முக்கிய துறைமுகங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், அவற்றுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. மாநிலங்களவையில் அந்த மசோதா புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களைத் தனியார்மயமாக்கும் நோக்கில் இந்த மசோதாவை மத்திய அரசு இயற்றியுள்ளதாக காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின. 

ADVERTISEMENT

துறைமுகங்கள் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்கும் நோக்கிலும் இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. எனினும், துறைமுகங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மசோதா வழிவகுக்கும் என்று பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. 
தனியார்மயமாக்கும் நடவடிக்கை இல்லை: எம்.பி.க்களுக்கு பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களைத் தனியார்மயமாக்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. அவற்றின் நிர்வாகத் திறனை மேம்படுத்தி தனியார் துறைமுகங்களுடனான போட்டியை அதிகரிக்கும் நோக்கிலேயே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய துறைமுகங்களின் திட்டமிடுதலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளே மசோதாவில் இடம்பெற்றுள்ளன. அதற்காக துறைமுக அதிகாரிகளை உள்ளடக்கிய வாரியங்கள் அமைக்கப்படும். அந்த வாரியங்கள் துறைமுகங்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்யும். 

கூட்டாட்சிக்கு முக்கியத்துவம்: கூட்டாட்சித் தத்துவத்தைக் கடைப்பிடிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி கொண்டுள்ளது. துறைமுகங்கள் மீதான மாநில அரசுகளின் அதிகாரம் ஒருபோதும் குறைக்கப்படாது. அரசு-தனியார் ஒத்துழைப்புடன் கொல்கத்தா துறைமுகம் மேம்படுத்தப்பட்டது. அதன் பலனைத் தற்போது பலர் அனுபவித்து வருகின்றனர். 

நாடாளுமன்ற நிலைகுழுக்களின் பரிந்துரைகளை ஏற்றபிறகே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துறைமுகத் தொழிலாளர்களின் நலன்கள் இந்த மசோதாவின் மூலம் பாதுகாக்கப்படும். கடந்த 6 ஆண்டுகளில் எந்தத் துறைமுகமும் நஷ்டத்தில் இயங்கவில்லை. 

இந்த மசோதாவின் மூலமாக துறைமுகங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக மாற்றமடையும். மேலும், துறைமுகங்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கான அதிகாரங்களையும் மசோதா வழங்குகிறது என்றார் அவர். 

வாக்கெடுப்பு: அதைத் தொடர்ந்து, மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 84 எம்.பி.க்களும், எதிராக 44 எம்.பி.க்களும் வாக்களித்தனர். அதனால், மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்படவுள்ளது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் மசோதா சட்டவடிவு பெறும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT