இந்தியா

தில்லி வன்முறை: தேடப்பட்டு வந்த மேலும் ஒருவர் கைது

10th Feb 2021 11:05 AM

ADVERTISEMENT

தில்லியில் டிராக்டர் பேரணியில் வன்முறைக்கு காரணமான மேலும் ஒரு நபரை தில்லி சிறப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் நிஹங் என்ற சீக்கியப் பிரிவைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடியை ஏற்றினர்.

இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றபோது போராட்டக்காரர்கள் மீது அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர். இதனால் விவசாயிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே கலவரம் மூண்டது.

செங்கோட்டையில் நடந்த இந்த வன்முறை தொடர்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக பஞ்சாபி நடிகர் தீப் சித்து அடையாளம் காணப்பட்டார். செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை ஏற்றுமாறு இளைஞர்களை அவர் தூண்டிவிட்ட விடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதையடுத்து, செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டதாக தீப் சித்துவுடன் சேர்த்து, ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங் ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

நேற்று நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (பிப்.10) காலை பஞ்சாப் மாநிலம் ஹோஸியார்பூர் பகுதியில் இக்பால் சிங்கை தில்லி சிறப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT