இந்தியா

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு அமெரிக்க பல்கலை. கெளரவம்

10th Feb 2021 03:07 AM

ADVERTISEMENT

உலகில் சமாதானம், மனிதநேயம், மத நல்லிணக்கம் வளர்வதற்காகப் பாடுபட்டு வரும் இந்திய ஆன்மிகத் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அமெரிக்க பல்கலைக்கழகத்தால் சர்வதேச குடியுரிமைத் தூதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
 இது குறித்து அமெரிக்காவில் உள்ள ஆன்மிகம், பேச்சுவார்த்தை, சேவைக்கான நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழக மைய நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர் லிவரிங் கெர்ன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 மனித விழுமியங்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்பவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இந்த கெளரவத்தைப் பெற மிகவும் பொருத்தமானவர்.
 இந்தப் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இது முதல் 50 இடங்களுக்குள் உள்ளதோடு, சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் பயிலும் மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது.
 ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அரசு, வணிகம் மற்றும் மனிதாபிமான அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் உத்திசார் முயற்சிகளின் மூலம் அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
 ஆப்கானிஸ்தான், பிரேஸில், கேமரூன், கொலம்பியா, இந்தியா, இந்தோனேசியா, இராக், இஸ்ரேல்-பாலஸ்தீனம், கென்யா, கொசோவோ, லெபனான், மோரீஷஸ், மொராக்கோ, நேபாளம், பாகிஸ்தான், ரஷியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மோதல்களுக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நிவாரணத் திட்டங்களையும் அவர் செயல்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறுகையில், "மோதலில் முதலில் ஏற்படும் விஷயம் தகவல் பரிமாற்ற துண்டிப்பு, இரண்டாவது நம்பிக்கையின்மை. இவற்றை நாம் கட்டுப்படுத்த முடிந்தால், தீர்வுக்கான செயல்முறை தொடங்கிவிடும்' என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT