இந்தியா

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்கள் 1178 சுட்டுரை கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

9th Feb 2021 08:02 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி, பிப். 8: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பும் 1178 சுட்டுரை கணக்குகளை முடக்கும்படி அந்நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இவை பாகிஸ்தான் அல்லது காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகள் என்றும், இந்த சுட்டுரை கணக்குகள் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சியினர், இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பிரபலங்களும் சுட்டுரையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களையும், சமூகத்தில் வெறுப்பை உருவாக்கும் தகவல்களையும் பரப்பும் 1,178 சுட்டுரை கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கண்டறிந்து, அந்தக் கணக்குகளை முடக்கும்படி சுட்டுரை நிறுவனத்துக்கு கடந்த 4}ஆம் உத்தரவிட்டது. இவை காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகள் அல்லது பாகிஸ்தானால் ஆதரவு அளிக்கப்படும் கணக்குகள் என்றும், வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் இந்த சுட்டுரை கணக்குகளால் பரப்பப்படும் விஷயங்கள் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, விவசாயிகள் இன அழிப்பு என்ற ஹேஷ்டேக்கை பரப்பிய 257 கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், சுட்டுரை நிறுவனம் இந்த உத்தரவை முழுமையாக நிறைவேற்றாத நிலையில், பாகிஸ்தான், காலிஸ்தான் ஆதரவாளர்களை பின்புலமாக கொண்டுள்ள இந்த சுட்டுரை கணக்குகளை முடக்கும்படி மற்றோர் உத்தரவை பிறப்பித்தது.
மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்கள் வெளியிட்டிருந்த பல பதிவுகளுக்கு சுட்டுரை தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே "லைக்' அளித்திருந்ததற்கு மத்திய அரசு அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT