இந்தியா

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்

6th Feb 2021 01:19 PM

ADVERTISEMENT

 

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தில்லி தவிர நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தங்களது போராட்டத்தின் வலிமையை மீண்டும் பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கங்கள் நடத்தி வருகின்றன.

தென் மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தில்லி தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்ட சாலை மறியலில் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஹரியாணா - பஞ்சாப் எல்லையான அம்பாலா அருகே ஷம்பு பகுதியில் ஏராளமான விவசாயிகள், இளைஞர்கள், முதியவர்கள் என குவிந்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வழங்கும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹரியாணாவில் பல்வால் அருகே அடோஹன் சௌக் பகுதியில் விவசாயிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் சார்பில், ஜம்முவின் பதான்கோட் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.

பெங்களூருவின் ஏலஹன்கா காவல்நிலையத்துக்கு வெளியே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மற்றும் மொஹாலியில் ஏராளமான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT