வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சூழலியல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம் என்ற அவரது பதிவு பெரும்கவனத்தைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து கிரேட்டா துன்பெர்க் மீது குற்றவியல் சதி மற்றும் பகைமையை ஊக்குவித்ததாக குற்றம்சாட்டி தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “இப்போதும் நான் விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். எந்தவிதமான வெறுப்பு, மனித உரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது வன்முறையால் இதனை மாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.