புது தில்லி; வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.25 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான விலை மாற்றம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக தில்லியில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.719க்கும், கொல்கத்தாவில் ரூ.745க்கும், மும்பையில் ரூ.719க்கும் சென்னையில் ரூ.735க்கும் விற்பனையாகும்.
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிவற்றை பொருத்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையை மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
இந்த வகையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.610-லிருந்து ரூ. 660 ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து ஒரேமாதத்தில் இரண்டாவது முறையாக டிசம்பர் 16-ஆம் தேதி மீண்டும் ரூ. 50 உயர்ந்து எரிவாயு உருளை விலை ரூ. 710 ஆக அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜனவரி மாதம் விலை உயர்வு அறிவிக்கப்படாமல், இன்று மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.