இந்தியா

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாதெமி விருது

30th Dec 2021 03:16 PM

ADVERTISEMENT

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. 

2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் தில்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்டவற்றுக்கு விருதாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். 

அதில், தமிழ் மொழியில் 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதை தொகுப்புக்காக பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாதெமி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளில் அம்பை குறிப்பிடத்தக்கவர். 1944ல் பிறந்த இவரது இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. வரலாற்றாசிரியர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்.

பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் ‘The Face Behind the Mask’, ‘The Singer and the Song’, ‘Mirrors and Gestures’ என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. பெண்ணியச் சிந்தனைகளையும், பெண்களின் மனங்களையும் வெளிப்படுத்தும் படைப்புகளை உருவாக்கியுள்ளார். 

சிறகுகள் முறியும், காட்டில் ஒரு மான், வீட்டில் மூலையில் ஒரு சமையலறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். 

‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013), அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014) உள்ளிட்டவை இவரின் சிறுகதைகள். இவரின் கதைகள் ஆங்கிலத்தில் ‘A Purple Sea’, ‘In a Forest, A Deer’, ‘Fish in a Dwindling Lake’, A Night With a Black Spider, A Meeting On the Andheri Over Bridge என ஐந்து தொகுதிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிளாவின் ‘Fragrance of Peace’ கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார்.

விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது(2005), டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011) முதலானவற்றைப் பெற்றிருக்கிறார். 'ஸ்பாரோ' (SPARROW-Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988-இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிக்க | எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிப்பு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT