இந்தியா

நாகலாந்தில் மேலும் 6 மாதத்திற்கு ஆயுதப் படை சட்டம் நீட்டிப்பு

30th Dec 2021 09:09 AM

ADVERTISEMENT

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

நாகலாந்தில் ஏஎஃப்எஸ்பிஏ சட்டம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தின்படி சந்தேகத்தின் அடிப்படையில் பிடியாணை இல்லாமல் ஒருவரை கைது செய்யவும், அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளவும், சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொண்டால் அல்லது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயுதப் படையினா் அத்துமீறி செயல்பட்டதாகக் கருதினால், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

ADVERTISEMENT

இந்தச் சட்டம் நாகாலாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் அந்த மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டம் ஒடிங் கிராமத்தில் தீவிரவாதிகளை தேடும் பணியின்போது பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் பலியாகினா். அதனைத்தொடா்ந்து அந்த மாநிலத்தில் ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என நாகாலாந்து முதல்வா் நெஃபியு ரியோ வலியுறுத்தினாா். அதற்கான தீா்மானம் அந்த மாநில சட்டப்பேரவையில் சமீபத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, நாகாலாந்தில் ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராய உயா்நிலை குழு அமைக்கப்பட்டு 45 நாள்களுக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT