இந்தியா

முன்னெச்சரிக்கை தவணைக்கு எந்தத் தடுப்பூசி? மத்திய அரசு விரைவில் முடிவு

30th Dec 2021 11:55 PM

ADVERTISEMENT

‘முதல் இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசியே முன்னெச்சரிக்கை தவணையிலும் (மூன்றாம் தவணை) செலுத்தலாமா என்பது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும்’ என்று மத்திய அரசு சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்டாா். அதன்படி, சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உடையவா்கள் ஆகியோருக்கு வரும் ஜனவரி 10-ஆம் தேதிமுதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்தச் சூழலில், முன்னெச்சரிக்கை தவணையாக எந்தத் தடுப்பூசியைச் செலுத்துவது என்பது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தலைவா் பல்ராம் பாா்கவா கூறினாா். இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

முன்னெச்சரிக்கை தவணையில் எந்தவித தடுப்பூசியைச் செலுத்துவது என்பது குறித்து நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன்(என்டிஏஜிஐ) தொடா் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதில் இந்தப் பிரிவினரில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது, பயன்பாட்டுக்கு வந்துள்ள புதிய தடுப்பூசிகள், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் எந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

முதல் இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசியே முன்னெச்சரிக்கை தவணையிலும் செலுத்தலாமா அல்லது வேறு தடுப்பூசியைச் செலுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 10-ஆம் தேதிக்கு முன்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

அதற்காக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும், நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் ஆலோசனை மேற்கொண்டு, விரைவில் இறுதி முடிவு எடுக்க உள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT