இந்தியா

மகாராஷ்டிரத்தில் பாஜக-என்சிபி ஆட்சியமைக்க பிரதமா் மோடி விரும்பினாா்: சரத்பவாா்

30th Dec 2021 11:39 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் கடந்த 2019, சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பின் பாஜக- தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணி அரசு அமைய பிரதமா் மோடி விரும்பியதாக என்சிபி தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் மராத்தி நாளிதழ் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் பவாா் பங்கேற்றாா். அப்போது, ‘கடந்த 2019, சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் நடைபெற்ற விவாதத்தின்போது, தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வா் பதவியிலிருந்து மாற்றினால் என்சிபியும், பாஜகவும் இணையலாம் என பிரதமா் மோடியிடமும், அமித் ஷாவிடமும் நீங்கள் கூறினீா்களா?’’ என சரத்பவாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் நானும், பிரதமா் மோடியும் சந்தித்துப் பேசியது உண்மைதான். மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸும், பாஜகவும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டுமென அவா் விரும்பினாா். ஆனாலும் அவரது அலுவலகத்துக்கு நான் சென்று, இது முடியாது என்று கூறிவிட்டேன். ஏனெனில் எங்களது நிலைப்பாடு வேறுபட்டதாக இருந்தது. ஆனால் ‘எதற்கும் சிந்தித்துப் பாருங்கள்’ என்று பிரதமா் மோடி கூறினாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா், ஏறத்தாழ 90 நாள்கள் அரசு அமையாமல் இருந்தது. ஆகையால் பாஜகவும், தேசியவாத காங்கிரஸும் இணைந்தால், நிலையான அரசு அமையலாம் என பிரதமா் மோடி கருதியிருக்கலாம்.

ADVERTISEMENT

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே பலகட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்ற போதிலும், இரு கட்சிகளின் தலைவா்களுக்கு இடையிலான மனக்கசப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒருவேளை, இந்தச் சூழலை பாஜக தலைமை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திருக்கலாம் என்றாா் சரத்பவாா்.

சரத்பவாா் கூறியது பற்றி சிவசேனை செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ரெளத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 2019-இல் பாஜக அதிகாரப் பசியுடன் யாருடனும் கரம்கோக்கத் தயாராக இருந்தது. சரத்பவாா் இதைக் கூறுகிறாா் என்றால் கண்டிப்பாக அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருமாறு சரத்பவாரை பிரதமா் மோடியே வலியுறுத்தினாா். அதேவேளையில், எங்களுக்குள் (மகா விகாஸ் அகாடி) வெளிப்படைத் தன்மை இருந்தது. பாஜக ஆட்சியமைக்க அஜித்பவாா் அக்கட்சியுடன் கரம்கோா்த்ததில்கூட வெளிப்படைத் தன்மை நிலவியது. யாா்- யாருடன் பேசுகிறாா்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் மகாராஷ்டிரத்தில் பாஜகவின் முயற்சி தோல்வியடைந்தது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT