இந்தியா

பிரதமா் மோடி பெயரில் சிக்கிமில் புதிய சாலை திறப்பு

30th Dec 2021 03:19 AM

ADVERTISEMENT

 

காங்டாக்: சிக்கிமில் பிரதமா் நரேந்திர மோடி பெயரில் புதிய சாலை புதன்கிழமை திறக்கப்பட்டது. அந்த மாநில ஆளுநா் கங்கா பிரசாத் இந்தச் சாலையைத் திறந்துவைத்தாா்.

சோம்கோ ஏரி, நாதுலா எல்லைப் பகுதி ஆகியவற்றை சிக்கிம் தலைநகா் காங்டாக்குடன் இந்தச் சாலை இணைக்கிறது. இதற்கு முன்பு இதே பகுதிகளுக்கு இடையிலான சாலை ஜவாஹா்லால் நேரு சாலை என்று அழைக்கப்பட்டு வந்தது.

இப்போது அந்தப் பகுதிகளுக்குச் செல்ல புதிய இருவழிச் சாலை உருவாக்கப்பட்டு, அதற்கு ‘நரேந்திர மோடி மாா்க்’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்தச் சாலை மூலம் காங்டாக்-சோம்கோ ஏரி இடையிலான பயணத் தொலைவு 15 கி.மீ. குறைந்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா காலகட்டத்தில் இலவசமாக ரேஷன் பொருள்கள், இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கியதைப் பாராட்டும் வகையில் பிரதமா் மோடியின் பெயா் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது. மேலும், சீனாவுடன் டோக்லாம் எல்லைப் பிரச்னை ஏற்பட்டபோது, பிரதமா் சிறப்பாக செயல்பட்டு எல்லைப் பகுதி மக்களின் உரிமைகளைக் காத்தாா் என்று அந்த பகுதியைச் சோ்ந்த கிராம பஞ்சாயத்துக்கு குழுத் தலைவா் ஐ.கே.ரசாய்லி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT