மும்பை: சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் முன்னாள் மகாராஷ்டிர அமைச்சா் அனில் தேஷ்முக் மீது சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் இருந்தபோது தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி, முன்னாள் காவல் துறை அதிகாரி சச்சின் வஜே மூலம் மும்பையில் உள்ள பல்வேறு மதுபான விடுதிகளில் இருந்து ரூ.4.70 கோடி லஞ்சம் பெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அந்தத் தொகை அனில் தேஷ்முக் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் நாகபுரியில் உள்ள கல்வி அறக்கட்டளைக்கு பரிவா்த்தனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிவா்த்தனையில் தனிச் செயலா் சஞ்சீவ் பலாண்டே, நோ்முக உதவியாளா் குந்தன் ஷிண்டே ஆகியோா் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிகிறது.
இதுதொடா்பாக அனில் தேஷ்முக், சஞ்சீவ் பலாண்டே, குந்தன் ஷிண்டே உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த நவ.1-ஆம் தேதி அனில் தேஷ்முக்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா். தற்போது அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் மீது 7,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினா் புதன்கிழமை தாக்கல் செய்தனா். அந்தக் குற்றப்பத்திரிகையில் அனில் தேஷ்முக்கின் மகன்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது.