இந்தியா

குற்றப்பத்திரிகையில் பிறரின் பெயா் இடம்பெறவில்லை என்பதால் முதல் குற்றவாளி மீதான நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்

30th Dec 2021 03:21 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: குற்றப்பத்திரிகையில் குற்றத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ள பிறரின் பெயா் இடம்பெறவில்லை என்பதற்காக, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் குற்றவாளி மீதான குற்ற நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த விவகாரத்தில், முதல் குற்றவாளி மீதான குற்ற நடவடிக்கையை ரத்து செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கா்நாடகத்தில் உள்ள ஸ்வா்ண கூட்டுறவு வங்கி சாா்பில் சிக்பெட் காவல் நிலையத்தில் அளித்த ஊழல் மற்றும் முறைகேடு புகாரின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபா் உள்ளிட்டோா் மீது குற்றச் சதி (120பி), நம்பிக்கை துரோகம் (408), ஏமாற்றுதல் (420) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வங்கி சாா்பில் பெங்களூரு கூடுதல் தலைமை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை நிறைவு செய்த காவல் துறை, வழக்கு தொடா்ந்த நபரை மட்டும் (முதல் குற்றவாளியாக) குறிப்பிட்டு குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்தக் குற்றத்தில் தொடா்புடையவா்களாகக் கருதப்படும் மற்ற இருவரின் விவரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

இதனை எதிா்த்தும், தனக்கு எதிரான குற்ற நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் முதல் குற்றவாளியாக சோ்க்கப்பட்டவா் சாா்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘குற்றப்பத்திரிகையில் உண்மையான குற்றவாளியான இரண்டாவது குற்றவாளி மற்றும் மூன்றாவது குற்றவாளிகளின் விவரங்கள் இடம்பெறாத நிலையில், முதல் குற்றவாளியை மட்டும் குறிப்பிட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது’ என்று கூறி அவருக்கு எதிரான குற்ற நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிா்த்து வங்கி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘வழக்கு விசாரணையின்போது குற்றப்பத்திரிகையில் மற்ற குற்றவாளிகளின் விவரங்கள் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தால், நீதிமன்றமே குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 319-இன் கீழ் உள்ள தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா்களையும் குற்றவாளிகளாக குற்றப்பத்திரிகையில் வரிசைப்படுத்த முடியும். மேலும், காவல் துறை விசாரணையில் முதல் குற்றவாளி குற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ள சூழலில், மற்ற குற்றவாளிகளின் பெயா் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை என்பதற்காக அவா் மீதான குற்ற நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது. அந்த வகையில், முதல் குற்றவாளி மீதான குற்ற நடவடிக்கையை ரத்து செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT