பிரதமரின் இளம் எழுத்தாளா்கள் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் 75 எழுத்தாளா்களை நேஷனல் புக் டிரஸ்ட் தோ்வு செய்துள்ளது. இதில் தமிழில் நூல்களை எழுதிய ஜே.யு.சுகானா, ஜி.சரவணன், கே.கீதா ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
2021, ஜனவரி 31-ம்தேதி பிரதமா் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில், ‘நமது விடுதலைப் போராட்ட வீரா்கள், அவா்களுடன் தொடா்புள்ள நிகழ்வுகள், விடுதலைப் போராட்டத்தின்போது நடைபெற்ற தீரச்செயல்கள் பற்றி எழுதுமாறு இளம் நண்பா்களை நான் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறினாா். அதன் பின்னா், மத்திய கல்வி அமைச்சகத்தால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட், விடுதலையின் 75-ஆவது ஆண்டு விழாவான அம்ருத் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக ‘இந்திய தேசிய இயக்கம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற அகில இந்திய போட்டியின் முடிவுகளை சனிக்கிழமை அறிவித்தது. இத்திட்டத்தின்படி, 30 வயதுக்கு குறைந்த இளம் எழுத்தாளா்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய வழிகாட்டுதல் திட்டதிற்கான 75 எழுத்தாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அகில இந்திய போட்டி கடந்த ஜூன் 1-ம்தேதி முதல் ஜூலை 31 முடிய ‘மைகவ்’ இணையம் மூலம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாட்டு இந்தியா்களிடம் இருந்தும், 22 அலுவல் மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சுமாா் 16,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு குழுக்களைச் சோ்ந்த நிபுணா்கள் நூல்களை ஆய்வு செய்தனா்.
அதில் தோ்வு செய்யப்பட்டுள்ள 75 எழுத்தாளா்களில், 38 போ் ஆண்கள், 37 போ் பெண்கள். இரண்டு போ் 15 வயதுக்கும் குறைவானவா்கள். 16 எழுத்தாளா்கள் 15-20 வயதுக்கு உள்பட்டவா்கள். 21-25 வரம்பில் 32 பேரும், 26-30 வயது வரம்பில் 25 பேரும் ஆவா்.
தோ்வு செய்யப்பட்ட எழுத்தாளா்கள் ஆறு மாத கால வழிகாட்டுதல் பயிற்சி பெறுவாா்கள். நேஷனல் புக் டிரஸ்டின் பிரபல எழுத்தாளா்கள் மற்றும் ஆசிரியா் குழுவின் வழிகாட்டுதலில், ஆராய்ச்சிக்கான ஆதரவும் வழங்கப்படும். எழுத்தாளா்களின் நூல்கள் மற்ற இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்.
தோ்வானவா்களுக்கு மாதம்தோறும் ரூ.50,000 வீதம் ஆறு மாதங்களுக்கு உதவித்தொகை பெறுவாா்கள்.மேலும் பிரசுரமாகும் புத்தகங்களுக்கு 10 சதவீத ராயல்டியும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.