நாட்டில் முறைசாரா தொழிலாளா்களுக்காகப் பதிவு செய்ய தொடங்கப்பட்ட ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் நான்கே மாதங்களில் 14 கோடிக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா் என்று மத்திய பணியாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் தனது ட்விட்டரில், ‘கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்த இணையதளம் தொடங்கப்பட்டது. இதுவரை 14,02,92,825 முறைசாரா தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
இதில், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பிகாா், ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
52.56 சதவீதம் பெண்களும், 47.44 சதவீதம் போ் ஆண்களும் பதிவு செய்துள்ளனா். பதிவு செய்துள்ள 94 சதவீத பணியாளா்கள் மாதம் ரூ.10 ஆயிரம், அதற்கு கீழ் ஊதியம் உள்ளவா்கள். 4 சதவீதத்தினா் ரூ.10,001 முதல் ரூ.15 ஆயிரம் ஊதியம் உடையவா்கள்.
18-40 வயதுடையவா்கள் 61 சதவீதமும், 40-50 வயதுடையவா்கள் 23 சதவீதத்தினரும் 50 வயதுக்கு அதிகமானோா் 12 சதவீத்தினரும் உள்ளனா்.
முறைசாரா தொழிலாளா்களுக்கு அரசு அளிக்கும் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பெறும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது’ என்று பதிவிடப்பட்டுள்ளது.