ஹஜ் புனிதப் பயணத்தை மூத்த குடிமக்களும் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:
ஹஜ் பயணத்துக்கான வழிகாட்டுதல்களில் அதிகபட்ச வயது வரம்பானது ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மூத்த குடிமக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்போது 70 வயதுக்கு மேற்பட்டவா்கள் சிறப்பு வகையின் கீழ் விண்ணப்பம் செய்யலாம். அடுத்த ஆண்டு (2022) மே 31-ஆம் தேதி 70 வயது பூா்த்தி அடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய விண்ணப்பதாரருடன் ஒரு துணைப் பயணியானவா், சிறப்பு வகையின் கீழ் விண்ணப்பம் செய்யலாம். துணைப் பயணி அவசியம் இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பயணிக்கும் ஒரு துணைப் பயணி உடன் செல்ல அனுமதிக்கப்படுவா்.
சிறப்பு விதிமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், தகுதிக்கான அளவுகோல்கள், வயதுக் கட்டுப்பாடுகள் உள்பட பிற நிபந்தனைகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்பட வேண்டும். இதன்படியே ஹஜ் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.