நிகழாண்டுக்கான நல்லாட்சி மாநில பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை வெளியிட்டார். அதில், ஒட்டுமொத்த நல்லாட்சி குறியீட்டில் குஜராத் மாநில முதலிடம் பிடித்துள்ளது.
நீதி, பொதுப் பாதுகாப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
யூனியன் பிரதேச மாநிலங்களில் தில்லி முதலிடத்தில் உள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினத்தை நல்லாட்சி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021 }ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை, கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
நல்லாட்சி குறியீடுகள் விவசாயம், வணிகம், மனித வள மேம்பாடு, பொது உள்கட்டமைப்பு, பொருளாதார நிர்வாகம், சமூக நலன், நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை ஆகிய பத்து துறைகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது. இந்தப் பட்டியலை வெளியிட்டு அமித் ஷா பேசியதாவது:
கடந்த 7 ஆண்டுகளாக மோடி அளித்து வரும் இந்த நல்லாட்சிக்காகவே மக்கள் நீண்ட காலமாக காத்திருந்தனர். நீண்ட காலத்துக்கு முன்பே சுதந்திரம் பெற்றுவிட்டபோதிலும், தங்களுக்கு எப்போது நல்லாட்சி கிடைக்கும் என்ற ஆதங்கத்துடனேயே மக்கள் காத்திருந்தனர்.
நல்லாட்சி மலராததால் நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு அடித்தட்டு மக்களுக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
பிரதமர் மோடி, 2014 இல் ஆட்சியில் அமர்ந்தது வெறுமனே அரசை வழிநடத்துவதற்காக மட்டுமல்ல. மாறாக தூய்மையான, வெளிப்படையான, பொதுநல நிர்வாகத்தை வழங்கவும் தான். இதன் மூலம் இந்த நாட்டின் மீதான பார்வையை அவர் மாற்றியுள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை மக்கள் அனுபவிக்கத் தொடங்கிய பிறகு, 2014 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் பல கட்சிகள் ஆட்சி புரிந்துள்ளன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி முந்தைய ஆட்சியைப் போன்றதல்ல என்பதையும், அவர் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காகவே வந்துள்ளார் என்பதையும் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
முந்தைய அரசுகள் வாக்கு வங்கிகளை மட்டுமே மனதில் வைத்து பல முடிவுகளை எடுத்தன. ஆனால் பிரதமர் மோடியோ மக்களுக்கு விருப்பமானவை என்பதற்காக எந்த முடிவையும் எப்போதும் எடுத்ததில்லை. மக்களுக்கு நன்மை தரக்கூடிய முடிவுகளை மட்டுமே அவர் எடுத்தார். இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உண்டு. சில முடிவுகள் குறுகிய காலத்தில் பிரபலமடைய உதவி செய்யக்கூடும், ஆனால் அதுபோன்ற முடிவுகள் நாட்டை எப்போதும் பிரச்னையிலேயே வைத்
திருக்கும்.
மோடி அனைத்து தரப்பினரையும் மனதில் கொண்டு நல்லாட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளை நிறைவேற்றித் தந்தார். அவரது நல்லாட்சிக்கு உதாரணம் என்னவென்றால், கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை; ஏனெனில் தூய்மையான, வெளிப்படையான நிர்வாகமாக மத்திய அரசு இருப்பதே காரணமாகும்.
கடந்த பல பத்தாண்டுகளாக அரசின் நலத்திட்டங்களையும், அதன் பலன்களையும் அனுபவிக்காத 60 கோடி மக்களுக்கான வளர்ச்சியின் பலன்களை மத்திய அரசு இந்த 7 ஆண்டுகளில் நிறைவேற்றி தந்துள்ளது.
ஏழைகளுக்கு கழிப்பறைகள், வீடுகள் கட்டித் தந்தது, மின்சாரம், எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்கியது என மோடி அரசு சாதனை புரிந்துள்ளது. பிரச்னைகளை வேரறுக்கக்கூடிய கொள்கைகளை அரசு உருவாக்கியுள்ளது.
மக்களுக்குப் பொறுப்புணர்வும் பொறுப்பும் உள்ள அரசே எப்போதும் தேவை. அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்; அதே சமயம் அரசு மக்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார் அமித் ஷா.