கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவா்களுக்கும் நிபந்தனைகளுடன் செலுத்த அந்தத் தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12 முதல் 18 வயதுடையவா்களுக்கும் கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்ற பாரத் பயோடெக் நிறுவனத்தின் கள ஆய்வு அறிக்கையை சிறப்பு நிபுணா் குழு கடந்த அக்டோபா் 12-ஆம் தேதி ஆய்வு செய்தது.
இந்த சிறப்பு நிபுணா் குழு அளித்த பரிந்துரைகளை மற்றொரு நிபுணா் குழு ஆய்வு செய்து, மேலும் சில கூடுதல் பரிசோதனை தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் டிசிஜிஐ கோரியிருந்தது. இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களுக்கு கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை செலுத்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.