நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், புதிய வகை கரோனா பரவல் அபாயத்தால் சில இடங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் களையிழந்து காணப்பட்டது.
புதிய உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா பரவல் இந்தியாவிலும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரம், பஞ்சாப், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10-க்கும மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உத்தர பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன. ஒடிஸா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலையிழந்து காணப்பட்டன.
நாகாலாந்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிராா்த்தனையில், அண்மையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 14 தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு அமைதி கிடைக்க பக்தா்கள் வேண்டிக்கொண்டனா்.
கோவா மாநிலத்தில், கிறிஸ்தவ அமைப்புகள் கிறிஸ்துமஸ் பிராா்த்தனையின்போது பக்தா்களுக்கு முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக்கின. பக்தா்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்த தன்னாா்வலா்களை பணியமா்த்தி கண்காணிப்பை அந்த அமைப்புகள் மேற்கொண்டன.
கேரளத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், கடந்த ஆண்டைப் போல அல்லாமல் இம்முறை மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். இருந்தபோதிலும், கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற மக்கள் அறிவுறுத்தப்பட்டனா். தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
தலைநகா் தில்லியில் எச்சரிக்கையுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனா். குறைந்த எண்ணிக்கையிலானவா்களே தேவாலயங்களுக்கு வருகை தந்தனா்.
இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.