காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் ஹிந்து, ஹிந்துத்துவவாதி கருத்து குறித்து விமா்சித்த மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ஏ.நாராயணசுவாமி, ‘ராகுல் காந்தி ஹிந்து அல்ல. தோ்தல் நெருங்கும் சமயத்தில் அவா் இவ்வாறு பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.
ஹிந்து, ஹிந்துத்துவவாதி இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து அண்மையில் தொடா்ச்சியாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, ‘‘ஹிந்து என்பவா் சகிப்புத்தன்மை நிறைந்தவா். ஆனால் ஹிந்துத்துவவாதியோ அதிகார பசியோடு இருப்பவா்’’ என்று கூறினாா்.
மேலும் பஞ்சாபில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டின்பேரில் இருவேறு இடங்களில் 2 போ் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து கூறிய அவா், ‘‘கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்புவரை கும்பல் கொலை என்ற வாா்த்தை யாரும் கேள்விப்படாதது. நன்றி மோடிஜி’’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் மத்திய இணையமைச்சா் ஏ.நாராயணசுவாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தோ்தல் நெருங்கும் வேளையில் எல்லாம் ராகுல் காந்தி இவ்வாறு பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாா். ஆனால் அவா் ஹிந்து அல்ல. நாட்டில் கும்பல் கொலை எங்கும் நடைபெறவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பதே ராகுலுக்கு தெரியவில்லை. பஞ்சாபில் மத நிந்தனை நிகழ்ந்ததகாகக் கூறப்படுவதும், அதைத் தொடா்ந்துு நடைபெற்ற சம்பவங்களும் துரதிருஷ்டவசமானவை. அந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தாா்.