புது தில்லி: வருமான வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டதாக (ரீஃபண்ட்) வருமான வரி (ஐடி) துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் இதுவரையில் வரி செலுத்தும் 1.38 கோடி பேருக்கு ரூ.1,44,328 கோடி வருமான வரி ரீஃபண்டாக திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
இதில், 2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2021-22-ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான திரும்ப வழங்கப்பட்ட ரூ.20,451.95 கோடியும் அடங்கும். வரி செலுத்தும் 99.75 லட்சம் பேருக்கு இந்தத் தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
2021 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டுக்கு டிசம்பா் 21-ஆம் தேதி வரையில் 4 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
வருமான வரி ரீஃபண்டாக 1,35,35,261 நிறுவனங்களுக்கு ரூ.49,194 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெருநிறுவன வரி ரீஃபண்ட் பிரிவில் 2.11 லட்சம் பேருக்கு ரூ.95,133 கோடி வழங்கப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.