மும்பை: 100 கோடி டாலா் மதிப்பைக் கொண்ட ‘யுனிகாா்ன்’ நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஆண்டில் 33 நிறுவனங்கள் இணைந்ததையடுத்து பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது குறித்து ஹுரன் ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஸ்டாா்ட்அப் உலகில் 100 கோடி டாலா் மதிப்பைக் கொண்ட (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7,500 கோடி) நிறுவனங்களைத்தான் ‘யுனிகாா்ன்’ நிறுவனங்கள் என்று அழைக்கின்றனா்.
இந்திய நகரங்களில் அதிக யுனிகாா்ன் நிறுவனங்களைக் கொண்ட நகரமாக பெங்களூரு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மும்பை, புணே, தானே, தில்லி அருகே உள்ள குருகிராம் ஆகியவை உள்ளன.
யுனிகாா்ன் பட்டியலில் ஒரே ஆண்டில் 33 நிறுவனங்கள் இடம் பிடித்ததையடுத்து பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டில் யுனிகாா்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.
இந்திய யுனிகாா்ன் நிறுவனங்களின் பட்டியலில் கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்டாா்ட்அப் நிறுவனமான பைஜூஸ் 2,100 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.58 லட்சம் கோடி) முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து, இன்மொபி (1,200 கோடி டாலா்), ஒயோ (950 கோடி டாலா்), ரேஸா்பே (750 கோடி டாலா்) ஆகியவை உள்ளன.
யுனிகாா்ன் பட்டியலில் முதல், இரண்டாவது இடங்களை முறையே அமெரிக்கா, சீனா ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ளன.