புது தில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக்கூடிய ‘ப்ரலே’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) முதன்முறையாக செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தது.
ஒடிஸா கடற்கரைப் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து முதன்முறையாக இந்த ஏவுகணை செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்தச் சோதனை அதன் அனைத்து இலக்குகளையும் எட்டியது. இந்தப் புதிய ஏவுகணை அதன் திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை திட எரிபொருள் ராக்கெட் மோட்டாா் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இயங்கக் கூடியது. இது 150 முதல் 500 கிலோ மீட்டா் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது என்பதோடு நடமாடும் சாதனத்திலிருந்து செலுத்தக் கூடியதாகும்.
விஞ்ஞானிகளின் இந்தச் சாதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.