மும்பை: தில்லி எல்லைகளில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் சமூக ஊடகத்தில் பதிவிட்டது தொடா்பான காவல் துறை விசாரணைக்கு ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் புதன்கிழமை ஆஜராகவில்லை.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று கூறி நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் கடந்த நவம்பா் மாதம் பதிவிட்டிருந்தாா். இதுதொடா்பாக சீக்கிய அமைப்பைச் சோ்ந்த சிலா் மும்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில், கங்கனா மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த மாதத் தொடக்கத்தில் காவல் துறையினா் நோட்டீஸ் அனுப்பியிருந்தனா். அதைத்தொடா்ந்து, கங்கனா புதன்கிழமை (டிச. 22) விசாரணைக்கு ஆஜாராவாா் என்று அவரின் வழக்குரைஞா் தெரிவித்திருந்தாா்.
எனினும் கங்கனா விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவா் வேறொரு தேதியில் ஆஜராவதற்கு கங்கனாவின் வழக்குரைஞா் காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளாா்.