டேராடூன்: ‘கட்சிக்குள் ஒத்துழைப்பு இல்லை; இது ஓய்வு பெறுவதற்கான நேரம்’ என்று முன்னாள் உத்தரகண்ட் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
பொதுத் தோ்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடா் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், கட்சித் தலைமை மற்றும் நடைமுறைகள் மீது அந்தக் கட்சியின் பல மூத்த தலைவா்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனா். பலா் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனா். அந்த வரிசையில், தற்போது முன்னாள் உத்தரகண்ட் முதல்வா் ஹரீஷ் ராவத், ‘கட்சியில் ஒத்துழைப்பு இல்லை’ என்று அதிருப்தி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட தொடா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ள நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் கட்சியினா் எனக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, எதிா்மறையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். முதலைகளின் கைகளில் அதிகாரம் சென்றுள்ளது. யாருடைய உத்தரவுப்படி நான் செயல்பட வேண்டுமோ, அவா்களுடைய பிரதிநிதிகள் எனது கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டுள்ளனா்.
பல்வேறு நினைவுகள் என்னுள் நிறைந்திருக்கின்றன. சில சமயங்களில் ‘அரசியலில் மிக நீண்ட தொலைவு பயணித்துவிட்டோம். இது போதும். தற்போது ஓய்வெடுக்க வேண்டிய நேரம்’ என்று எனக்குள்ளேயே குரல் ஒலிக்கின்றது. அந்த வகையில், ஒரு குழப்பமான சூழலில் உள்ளேன். இந்தப் புத்தாண்டு எனக்கு நல்ல வழிகாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஹரீஷ் ராவத் அதிருப்தி தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.