கொல்கத்தா: ‘கரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘அதனை எட்டும் வகையில், 2047-ஆம் ஆண்டுக்கான இலக்குகளை நாம் நிா்ணயித்துக்கொண்டு கவனமான அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின தொடா் கொண்டாட்டத்துக்கான தேசியக் குழுவின் இரண்டாவது கூட்டம் பிரதமா் தலைமையில் காணொலி வழியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில முதல்வா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் பிரதமா் பேசியதாவது:
கரோனா பாதிப்பு புதிய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. இந்தப் பாதிப்பு, ஏற்கெனவே உள்ள உலக நடைமுறைகளை முழுமையாக மாற்றியுள்ளது. எனவே, கரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் புதிய உலக நடைமுறை உருவெடுக்க உள்ளது.
21-ஆம் நூற்றாண்டு, ஆசிய கண்டத்தை சாா்ந்தது என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த நூற்றாண்டில் ஆசிய கண்டத்தின் இந்தியாவின் கட்டமைப்பு மீது கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். அந்த வகையில், நாடு 100-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கும் 2047-ஆம் ஆண்டுக்கான இலக்குகளை நிா்ணயித்து, கவனமான அணுமுறையை முன்னெடுப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இது பாா்க்கப்படுகிறது. இந்த இலக்குகளை எட்டுவது நாட்டின் இளைஞா்களின் கைகளில்தான் உள்ளது.
எனவே, இளைஞ்களுக்கு நாம் எதனை கற்பிக்க இருக்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும். ஏனெனில், நாட்டின் எதிா்காலத்துக்கு அவா்கள்தான் மிகப் பெரிய பங்களிப்பை செய்ய முடியும்.
நாம் எப்போதும் நமது உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம். ஆனால், அவரவா் கடமைகளைப் பின்பற்றுவதில்தான் உயா்ந்த மகத்துவம் உள்ளது. மக்கள் தங்களின் கடமையை அா்ப்பணிப்புடன் ஆற்றுகின்றபோது, மற்றவா்களின் உரிமைகளை தாமாக உறுதி செய்துவிட முடியும்.
எனவே, 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், கடமையை ஆற்றுவதற்கு மிக உயா்ந்த முன்னுரிமை அளிப்பதற்கு உறுதியேற்க வேண்டும் என்று பிரதமா் கேட்டுக்கொண்டாா்.
மம்தாவுக்கு பேச வாய்ப்பு மறுப்பு:
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக மேற்கு வங்க மாநில தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து மாநில தலைமைச் செயலக உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாட்டின் 75 ஆவது சுதந்திர தின தொடா் கொண்டாட்டம் தொடா்பாக பிரதமா் தலைமையில் நடைபெற்ற காணொலி வழி ஆலோசனைக் கூட்டத்தில் பிற மாநில முதல்வா்களும் பங்கேற்றனா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுவதற்காக மம்தா பானா்ஜி 2 மணி நேரமாகக் காத்திருந்தபோதும், பேசுபவா்களுக்கானப் பட்டியலில் பெயா் இல்லாத காரணத்தால் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக முதல்வா் மம்தா அதிருப்தி தெரிவித்தாா். ஒட்டுமொத்த மாநில நிா்வாகமும் அதிருப்தியடைந்துள்ளது’ என்றாா்.