புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் (உபா), கடந்த 3 ஆண்டுகளில் 4,690 போ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் 149 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘உபா சட்டத்தின்கீழ் கடந்த 2018-இல் 1,421 பேரும், 2019-இல் 1,948 பேரும், 2020-இல் 1,321 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் கடந்த 2018-இல் 35 போ், 2019-இல் 34 போ், 2020-இல் 80 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா். நீதித்துறை விரிவான செயல்பாடு காரணமாகவும், விசாரணை காலம், சாட்சியங்களின் மதிப்பீடு, சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆகிய பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் இத்தனை போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா். மேலும், உபா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், அதில் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அரசியல் சாசன, நிறுவன, சட்டமுறை பாதுகாப்புகளும் போதிய அளவில் உள்ளன’’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.