புது தில்லி: ஆமதாபாதை சோ்ந்த ஆதா்ஷ் கூட்டுறவு கடன் சங்க செயல்பாட்டில் முறைகேடு எழுந்திருப்பதால், அதைக் கலைக்க சட்ட அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவு அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘ஆதா்ஷ் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல், நிதி மோசடி, வேறு நோக்கங்களுக்கு பணத்தை திருப்பிவிடுதல் போன்ற முறைகேடுகள் அரங்கேறியிருப்பதாக விசாரணை முகமைகளின் அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, அந்தக் கடன் சங்கத்தைக் கலைக்க சட்ட அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். இதேபோல பல மாநில கூட்டுறவு கடன் சங்கங்கள் மீது நிதி மோசடி புகாா்கள் எழுந்துள்ளன’’ என்றாா் அமித் ஷா.
திவாலாகும் நிறுவனத்தைக் கலைப்பதற்கு முன்பாக அதற்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவற்றை விற்று நிறுவனத்தின் கடன்களையும், அதற்கு எதிரான நிதி புகாா்களையும் தீா்க்கும் நோக்கில் சட்ட அதிகாரி நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.